ஜனவரி - 2006  ஏகத்துவம் மாத இதழில்...


ஜகாத் ஓர் ஆய்வு

விமர்சனங்களும் விளக்கங்களும்


காத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு வருடாவருடம் ஜகாத் கொடுக்க வேண்டுமா? என்ற ஆய்வுக் கட்டுரையை செப்டம்பர் 2005 ஏகத்துவம் இதழில் நாம் வெளியிட்டிருந்தோம். இந்த ஆய்வுக் கட்டுரை வெளிவந்து இரண்டு மாதங்களுக்குப் பின் அல்ஜன்னத் மாத இதழில் நமது ஆய்வுக் கட்டுரை பற்றி மறு ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்டுள்ளனர்.

முரண்பட்ட இரண்டு கருத்துக்கள் மக்கள் மத்தியில் வைக்கப்படும் போது ஆரம்பத்தில் குழப்பம் போல் தோன்றினாலும் இறுதியில் எது சரியான கருத்தோ அந்தக் கருத்தை அறிவுடையோர் திட்டவட்டமாக அறிந்து கொள்ள இயலும் என்பதால் அல்ஜன்னத்தின் மறு ஆய்வுக் கட்டுரையை நாம் மனதார வரவேற்கிறோம்.


அவர்களின் மறு ஆய்வுக் கட்டுரை சரியானதாக அமைந்திருந்தால் அதை ஏற்றுக் கொள்ளவும் நாம் தயக்கம் காட்ட மாட்டோம். ஜகாத் ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்ட ஏகத்துவம் இதழிலேயே நாம் இதனைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம்.


அல்ஜன்னத்தின் மறு ஆய்வுக் கட்டுரைக்குள் செல்வதற்கு முன்னால் சில முக்கியமான தகவல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.


ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டுமா? என்பதில் தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்கள் மத்தியிலேயே ஆரம்பத்தில் மாறுபட்ட இரண்டு கருத்துக்கள் இருந்து வந்தன. ஒவ்வொரு கருத்துடையவர்களும் தத்தமது கருத்தைக் கூறி வந்தனர்.


அவர்கள் மத்தியில் கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு அமர்வுகள் நடத்தப்பட்டன. அதன் பின்னரே 'ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை' என்ற ஒத்த கருத்துக்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் அனைத்து அறிஞர்களும் வந்தனர்.


ஆயினும், வருடாவருடம் ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை என்ற கருத்தில் ஆரம்பம் முதலே இருந்து வந்த அறிஞர்களின் வாதம் சரியானது என்றாலும் அதை நிறுவுவதற்காக எடுத்து வைத்த சில காரணங்களும், சில ஆதாரங்களும் சரியானவை அல்ல என்ற முடிவுக்கும் அனைவரும் வந்தனர்.


ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் வருடா வருடம் கொடுக்க வேண்டியதில்லை என்ற வாதத்தை முன் வைக்கும் போது எந்த ஆதாரம் அனைவராலும் சரியானது என்று ஏற்றுக் கொள்ளப் பட்டதோ அதை மட்டுமே கூற வேண்டும். எந்தக் காரணம் எதிர்க் கருத்து சொல்ல முடியாத அளவுக்கு வலிமையானதாகவுள்ளதோ அதை மட்டுமே கூற வேண்டும் என்ற முடிவும் அன்றைய தினம் எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தான் ஏகத்துவம் இதழ் வெளியிடப்பட்டது.


தவிர்க்கப்பட்ட ஆதாரங்கள்


  கொடுத்த பொருளுக்கே ஜகாத் கொடுத்தால் ஏழ்மை ஏற்படும் என்பது போன்றவற்றை உதாரணமாகக் கூட கூறக் கூடாது.
  ''ஒருவனுக்கு ஒரு பொருள் கிடைத்தால் ஒரு ஆண்டு நிறைவடையும் வரை ஜகாத் இல்லை என்ற ஹதீஸ்களில் ஒரே ஒரு அறிவிப்பு மட்டும் சரியாகவுள்ளது; ஆயினும் அந்த ஹதீஸின் வாசகத்திலிருந்து கொடுத்த பொருளுக்கு மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு வர முடியாது'' என்ற வாதத்தையும் எடுத்து வைக்கக் கூடாது. ஏனெனில் இந்தக் கருத்தில் எந்த ஒரு ஹதீஸும் ஆதாரப்பூர்வமானது அல்ல.
  ''ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு வருடா வருடம் மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை என்று சட்டம் எளிமையாக இருந்தால் தான் அதிகமானோர் ஜகாத் கொடுப்பார்கள்'' என்பது போன்ற வாதங்களையும் தவிர்க்க வேண்டும்.
  இறுதியாக எடுக்கப்பட்ட முடிவுகளை மட்டுமே ஏகத்துவத்தில் வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிடப்பட்டவற்றை மட்டுமே தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்கள் ஜகாத் குறித்த ஆதாரங்களாகக் குறிப்பிட்டுப் பேச வேண்டும்.
  புதிய ஆதாரங்கள் ஏதும் கிடைத்தால் அனைத்து அறிஞர்களும் ஆய்வு செய்து பின்பே அதை அறிவிக்க வேண்டும்.
என்பன போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டு அதன் அடிப்படையில் ஏகத்துவம் ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டது. இதன் காரணமாகத் தான் முதன்மையான ஆதாரம் எது? துணை ஆதாரம் எது? என்று அக்கட்டுரையில் ஆங்காங்கே சுட்டிக் காட்டப்பட்டது.


ஆயினும் ஏகத்துவம் இதழின் ஆய்வை மறு ஆய்வு செய்யப் புகுந்த அல்ஜன்னத் இதழ், ஏகத்துவத்தில் நாம் எழுப்பிய வாதங்களில் சிலவற்றைக் கண்டு கொள்ளவில்லை. ஏகத்துவத்தில் எழுதப்படாத பல விஷயங்களுக்கு வியாக்கியானம் செய்துள்ளது. அவற்றை ஆங்காங்கே விளக்குவோம்.


அல்ஜன்னத்தின் மறு ஆய்வுக் கட்டுரையில் எந்த ஒரு ஒழுங்கு முறையும் கடைப்பிடிக்கப்படவில்லை. அவர்கள் எடுத்து வைக்கும் வாதங்களை சாதாரண மக்கள் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு இயன்ற வரை குழப்பியுள்ளனர்.
அவர்களின் மறுப்பை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் முறைப் படுத்துவதாக இருந்தால் மூன்று வகையாக முறைப்படுத்தலாம்.


முதல் வகை
ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு வருடா வருடம் மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற கருத்துடையவர்கள் எந்தெந்த ஆதாரங்களை முன் வைக்கிறார்களோ அவை அனைத்தையும் விரிவாக நாம் விளக்கி, அவை அனைத்துமே தவறானவை என்று ஏகத்துவம் செப்டம்பர் - 2005 இதழில் நிரூபித்திருந்தோம்.
அதற்கு அல்ஜன்னத் மறு ஆய்வில் என்ன பதில் சொல்லி இருக்கின்றது என்பது முதல் வகை!


இரண்டாம் வகை
ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் ஜகாத் கொடுக்கத் தேவையில்லை என்பதற்கு நமது தரப்பில் முதன்மையான சான்றுகளையும் துணைச் சான்றுகளையும் ஏகத்துவத்தில் விளக்கியிருந்தோம்.
இதற்கு அல்ஜன்னத் மறு ஆய்வுக் கட்டுரை என்ன பதில் கூறியுள்ளது என்பது இரண்டாம் வகை!


மூன்றாம் வகை
ஏகத்துவத்தில் எழுதாத, அதே நேரத்தில் கடந்த காலத்தில் தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்கள் இது பற்றிக் கூறிய உதாரணங்கள், காரணங்கள். இது பற்றி அல்ஜன்னத் மறு ஆய்வுக் கட்டுரை கூறிய பதில்.


இப்படி மூன்றாக அல்ஜன்னத்தின் மறு ஆய்வுக் கட்டுரையை நாம் வரிசைப் படுத்தியுள்ளோம். சாதாரணமாக அனைவரும் புரிந்து கொள்ள ஏற்ற வகையில் இவ்வாறு நாம் வகைப்படுத்தியுள்ளோம். இனி அல்ஜன்னத்தின் மறு ஆய்வு சரியானதா? என்பதை விரிவாக அலசுவோம்.

 

யாருமே சொல்லாத கருத்து


'ஒரு பொருளுக்கு ஒரு தடவை தான் ஜகாத் என்ற கருத்து கடந்த காலங்களிலும் இருந்துள்ளது என்று இப்னு ஹஸ்மு அவர்கள் கூடத் தெரிவிக்கின்றார்கள்' என தனது உரையில் பி.ஜே. கூறியிருந்தார். கடந்த காலத்தில் யாரும் சொல்லியிருக்கிறார்களா? இல்லையா? என்பது நமக்குத் தேவையற்றது என்று முடிவு செய்ததால் அதை ஏகத்துவத்தில் வெளியிடவில்லை.


இப்னு ஹஸ்மின் பெயரால் பொய் கூறிவிட்டதாக அல்ஜன்னத் மறு ஆய்வு கூறுகின்றது. கடந்த காலத்தில் இந்தக் கருத்து கூறப்பட்டுள்ளது என்பதற்கு நாம் ஆதாரம் காட்டத் தேவையில்லாத அளவுக்கு அவர்களே காட்டிக் கொண்டனர்.

மேய்ந்து திரியாத கால்நடைகள், அணியும் நகைகள் ஆகிய இரண்டுக்கு மட்டும் ஒரு தடவை ஜகாத் வழங்கி விட்டால் அதற்கு ஜகாத் இல்லை எனக் கூறும் சிலருக்கு அதனை மறுக்கும் விதமாக இப்னு ஹஸ்ம் பின்வரும் கேள்விக் கணையையும் அவர்களை நோக்கி வீசுகின்றார். ஒட்டகம், மாடு, ஆடு ஆகியவற்றின் ஜகாத்தை வசூலிக்க நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு வருடமும் ஆட்களை அனுப்பிக் கொண்டிருந்தார்கள் என்ற செய்தி போதுமான சான்றுகளோடு கூறப்பட்டு அது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே ஜகாத் வசூலிப்போரை ஒவ்வொரு வருடமும் அனுப்பி வைப்பது (கடந்த காலங்களில் ஜகாத் வழங்கப்பட்டது உட்பட அனைத்து பொருட்களிலும்) ஜகாத் வசூலிப்பது கடமை என்பதை என்பதையே தெளிவு படுத்துகின்றது. இந்நிலையில் முதல் ஆண்டில் ஜகாத் வாங்கியவற்றில் அடுத்த ஆண்டு ஜகாத் வாங்குதல் இல்லை என்பது சான்றில்லாத கூற்றாகும். (அல்முஹல்லா பாகம் 6, பக்கம் 28) - என்று அல்ஜன்னத் எழுதியுள்ளது.


கால்நடைகளுக்கும், நகைகளுக்கும் ஒரு தடவை தான் ஜகாத் என்ற கருத்துடையவர்களுக்கு எதிராக இப்னு ஹஸ்ம் கேள்வி எழுப்புகின்றார் என்றால் அந்தக் காலத்தில் இந்தக் கருத்து இருந்துள்ளது என்பது தானே பொருள்.


ஜகாத் சட்டம் தெளிவானதே!


ஜகாத் எப்படிக் கொடுக்க வேண்டும் என்பது பற்றி இஸ்லாம் தெளிவுபடுத்தவில்லை என்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏகத்துவம் செப்டம்பர் இதழில் வெளிப்படுத்தி மக்களிடையே பதட்ட நிலையை உருவாக்குகின்றனர். என்றும் அல்ஜன்னத் மறு ஆய்வுக் கட்டுரை கூறுகின்றது.


ஒரு பொருளுக்கு ஒரு தடவை தான் ஜகாத் என்று நாம் கூறுவதால் ஜகாத் சட்டத்தை இஸ்லாம் தெளிவு படுத்தவில்லை என்று எப்படி ஆகும்?


ஒரு பொருளுக்கு ஒரு தடவை ஜகாத் என்பது தான் உண்மையில் தெளிவாகவுள்ளது. இஸ்லாம் மிகத் தெளிவாக ஜகாத் சட்டத்தைக் கூறியுள்ளது என்பதால் தான் மேற்கண்ட தெளிவான சட்டத்தை நாம் கூறுகின்றோம். காலம் நிர்ணயம் செய்யாமல் ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும் என்று கூறினால் அதன் பொருள் ஒரு தடவை செய்ய வேண்டும் என்பது தான். இது தான் தெளிவானது. வருடா வருடம், வாரா வாரம் என்று இல்லாததைச் சேர்ப்பது தான் தெளிவற்றது என்பதை அல்ஜன்னத் உணர வேண்டும்.

 

 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005