- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) - http://www.tntj.net -

சென்னை புத்தகக் கண்காட்சியில் களை கட்டும் அழைப்புப்பணி!

Posted By admin On January 16, 2013 @ 12:21 pm In தலைமைகழக செய்தி,முக்கியச் செய்திகள் | Comments Disabled

வருடந்தோறும் ஜனவரி மாதத்தில் சென்னையில் பிரம்மாண்டமான புத்தகக் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். கடந்த 35 ஆண்டுகளாக வருடந்தோறும் நடைபெற்று வரும் இந்த புத்தகக் கண்காட்சியில் சென்ற ஆண்டு 8 லட்சம் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில், அதுவும் புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் மக்கள் கூடும் இடங்களில் தூய இஸ்லாத்தை எடுத்து வைத்தால் மக்கள் மத்தியில் இஸ்லாமிய மார்க்கம் செவ்வனே சென்றடைய வாய்ப்புகள் அதிகம் என்பதால் இந்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மூன் பப்ளிகேஷன் என்ற பெயரில் புக் ஸ்டால்கள் பதிவு செய்யப்பட்டன.

ஜனவரி 11 முதல் 23 வரை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் இந்த புத்தகக் கண்காட்சியில் மூன்பப்ளிகேஷனின் புக் ஸ்டால் எண் 270, 271

இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துச் சொல்லக்கூடிய புத்தகங்கள், இஸ்லாத்தின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கான பதில்கள், இஸ்லாம்தான் இறைவனின் மார்க்கம் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவுபடுத்தும் நூல்கள், ஆகிய அனைத்து ஏகத்துவ நூல்களும் 10% கழிவு விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

கண்காட்சியில் நமது ஸ்டாலுக்கு வரக்கூடிய பிறமத சகோதரர்கள் மத்தியில் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எடுத்தியம்பக்கூடிய புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்படுவதுடன், இஸ்லாமிய மார்க்கமும் அறிமுகம் செய்து வைக்கப்படுகின்றது. அதற்கென்று நியமிக்கப்பட்டுள்ள டிஎன்டிஜேயின் பிரச்சாரகர்கள் இந்தப்பணியை செவ்வனே செய்து வருகின்றனர்.

நமது ஸ்டால் முழுவதும் இஸ்லாத்தை எடுத்துச் சொல்லக்கூடிய திருக்குர்ஆன், நபிமொழி வாசகங்கள் அடங்கிய பேனர்கள் மூலமும் அழைப்புப்பணி நடக்கின்றது.

பீஜே அவர்களின் திருக்குர்ஆன் மொழியாக்கம் பிறமத சகோதரர்களுக்காக 150 ரூபாய் விலையில் விற்கப்படுகின்றது. 1592 பக்கங்களுடன் கூடிய திருக்குர்ஆன் தமிழாக்கத்தின் 11வது பதிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதன் விலை ரூ.350 ஆகும். பிறமத மக்கள் மத்தியில் திருக்குர் ஆன் தமிழாக்கத்தை கொண்டு செல்ல வேண்டும் என்ற அடிப்படையில் மீதத்தொகைக்கு டிஎன்டிஜே ரியாத் மண்டலமும் ஆஸ்டிரேலியா மண்டலமும் அல்கசீம் மண்டலமும் கத்தர் மண்டலமும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

இஸ்லாத்தை அதன் தூய வடிவில் கொண்டு செல்லும் வண்ணமாக புத்தகக் கண்காட்சிக்கு வரக்கூடிய பார்வையாளர்கள் ஒவ்வொருவருடைய கைகளிலும் இஸ்லாம் குறித்த துண்டுப் பிரசுரங்கள் கிடைக்கும் வகையில் டிஎன்டிஜேயின் தென்சென்னை மாவட்ட கிளைகள் மூலம் ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.

துண்டுப்பிரசுரத்திற்கான செலவை டிஎன்டிஜே ஜித்தா ,ஆஸ்டிரேலியா, புருனை, பஹ்ரைன் ஆகிய மண்டலங்கள் ஏற்றுள்ளது.

புத்தகக் கண்காட்சி ஸ்டாலின் மொத்த வாடகையை தம்மாம் மண்டலம் ஏற்றுள்ளது

வார நாட்களில் மதியம் 2.30மணி முதல் இரவு 8.30 வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 11மணி முதல் இரவு 9மணி வரையிலும் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் நீங்கள் உங்களது பிறமத சகோதரர்களை அழைத்து வருவதுடன், அவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொல்ல உங்களையும் டிஎன்டிஜே அன்புடன் அழைக்கின்றது.

குறிப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் புத்தகக் கண்காட்சியில் ஸ்டால் அமைக்க கண்காட்சி அமைப்பாளர்கள் ஒப்புக் கொள்ளாததால், டிஎன்டிஜே மாநிலத் தலைமையகம் சார்பாக ‘மூன் பப்ளிகேஷன்’ பெயரில் ஸ்டால் அமைக்கப்பட்டு அழைப்புப்பணி செவ்வனே நடைபெற்று வருகின்றது


Article printed from தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ): http://www.tntj.net

URL to article: http://www.tntj.net/126960.html

Copyright © 2012 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ). All rights reserved.