அஸ்ஸாம் முதல்வரை கண்டித்து சென்னையில் நடைபெற்ற மாபெரும் முற்றுகைப் போராட்டம்: கைது செய்ய வசதி இல்லாமல் கலைந்து செல்லுங்கள் எனக் கூறிய காவல்துறை! அல்ஹம்துலில்லாஹ்!!

அஸ்ஸாமில் போடோ இன கிறித்தவ தீவிரவாதிகளால் அங்குள்ள முஸ்லிம்கள் மிகப்பெரும் தாக்குதல்களுக்கு ஆளாகி பலர் கொல்லப்பட்டு, பலர் தங்களது வீடுகளையும், சொத்து பத்துகளையும் இழந்து அகதிகள் முகாம்களில் இருந்து வருகின்றனர். அவர்கள் தங்களது வீடுகளுக்கு இன்று வரை திரும்பமுடியாமல் இன்னல்பட்டு வருகின்றனர்.

இப்படி இன்னல்பட்டுவரும் இவ்வேளையிலும் போடோ இனத்தீவிரவாதிகள் இன்றுவரை அஸ்ஸாமில் உள்ள முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலை தொடர்கின்றது.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டியளித்த அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகாய் என்பவர் முஸ்லிம்களுக்கு எதிராக விஷம் கக்கியுள்ளார்.

அஸ்ஸாம் கலவரத்திற்கான காரணத்தை அவரிடம் கேட்கும் போது, முஸ்லிம்கள் அதிகமாக பிள்ளை பெற்றுக் கொள்வதும், அவர்களது கல்வியறிவின்மையும்தான் இந்தக் கலவரத்திற்கு காரணம் என்று பேட்டியளித்துள்ளார்.

இவரது இந்த திமிர் பேச்சைக் கண்டித்தும், அஸ்ஸாம் கலவரத்தைத் தடுக்கத்தவறிய அவரது கையாலாகாத்தனத்தைக் கண்டித்தும், முஸ்லிம்கள் தங்களது வசிப்பிடங்களில் தேவையான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளுடன் உடனடியாக குடியமர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி புதன் கிழமை தமிழகத்திலுள்ள காங்கிரஸின் தலைமையகமான சத்திய மூர்த்தி பவனை முற்றுகையிடுவதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்தது.

12.09.12 அன்று மாலை 4 மணிக்கு சத்திய மூர்த்தி பவன் அருகே குவிந்த ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் அஸ்ஸாம் முதல்வருக்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு தொடர் துரோகமிழைக்கும் காங்கிரஸுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.

மாநிலத் தலைவர் பீஜே கண்டன உரையாற்றினார்.

அவர் தனது கண்டன உரையில், மூன்று மாதங்களாக ஒரு மாநிலத்தில் கலவரம் தொடர்ந்து நடந்து வருவதாக சொல்லிக் கொண்டிருக்கின்றார்களே! அந்த மாநிலத்தில் அரசாங்கம் என்ற ஒன்று உள்ளதா? இல்லையா?

அந்த அளவிற்கு கையாலாகாத அரசாங்கமாக இந்த காங்கிரஸ் அரசும், கையாலாகாத முதல்வராக தருண் கோகாய் என்பவரும் இருந்து வருகின்றனர்.

சோனியாவிடம் இது குறித்து கேட்டால், முஸ்லிம்கள் அகதிகள் முகாம்களில் நல்ல முறையில் கவனிக்கப்படுகின்றார்கள் என்று சொல்கின்றார். இதுதான் ஒரு தலைவி பேசக்கூடிய பேச்சா? இது போன்று இவரை அகதி முகாமில் அடைத்து சோறு போட்டால் அதை அவர் ஏற்றுக்கொள்வாரா?

எவனிடத்தில் கலவரத்திற்கான காரணத்தைக் கேட்டாலும் முஸ்லிம்களின் ஊடுருவதல்தான் காரணம் என்று சொல்கின்றான்.

பர்மாவில் கலவரத்திற்கு காரணம் என்னவென்று கேட்டால் பங்களாதேஷிலிருந்து முஸ்லிம்கள் ஊடுருவியதுதான் காரணம் என்று சொல்கின்றனர்.

அஸ்ஸாமில் கலவரத்திற்கு காரணம் என்னவென்று கேட்டால் அதற்கும் பங்களாதேஷிலிருந்து முஸ்லிம்கள் ஊடுருவியதுதான் காரணம் என்று சொல்கின்றனர்.

அதே நேரத்தில் பங்களாதேஷில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகின்றது என்றும் சொல்கின்றனர்.

ஒவ்வொரு நாட்டிலும் உள்ள முஸ்லிம்கள் அடுத்த நாட்டிற்கு அங்கிருந்து ஊடுருவினால் இடம்பெயர்ந்த நாட்டில் முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைய வேண்டுமா? கூட வேண்டுமா?

இப்படி அஸ்ஸாமில் இத்தனை லட்சம் பேர் பங்களாதேஷிலிருந்து ஊடுருவியதாக சொல்கின்றீர்களே! நமது நாட்டின் ராணுவம் என்ன செய்து கொண்டுள்ளது? இங்கு ராணுவம் என்று ஒன்று உள்ளதா? இல்லையா? ஊடுவருவக்கூடியவர்களை தடுக்க ராணுவத்தால் இயலவில்லையா?

அப்படியானால் அண்டை நாடுகளான சீனா, இலங்கை, பாகிஸ்தான் நாட்டு மக்கள் எல்லாம் எளிதாக இந்தியாவிற்குள் ஊடுருவ முடியுமா?

இப்படி பங்களாதேஷிலிருந்து மக்கள் ஊடுருவுவது உண்மையென்று வைத்துக் கொண்டாலும் அதற்குக் காரணமே இந்த அயோக்கிய காங்கிரஸ்தான். இந்திரா காந்தி ஆட்சியின் போது கிழக்கு பாகிஸ்தானாக இருந்த நாட்டை தனியாக பங்களாதேஷ் என்று பிரித்து நட்பு நாடு என்று அறிவித்தது காங்கிரஸ்தானே!

பா.ஜ.க.வின் அத்வானிதான் பங்களாதேஷிலிருந்து முஸ்லிம்கள் ஊடுருவுகின்றனர் என்ற விஷத்தை முதலில் கக்கியவர். இது உண்மை எனில் அவர்கள் ஆட்சி புரிந்து கொண்டிருந்த ஐந்து ஆண்டுகள் அதை தடுக்காதது ஏன்?

அப்படியே அடுத்த நாட்டிலிருந்து இங்கு வந்து தஞ்சம் புகுந்து இங்கு வாழ்பவர்களுக்கு அரசியல் சாசன சட்டம் என்ன சொல்கின்றது என்ற சட்டம் கூட உங்களுக்குத் தெரியாதா? அப்படி இந்திய நாட்டில் குடியுரிமை கேட்பவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்பதுதான் இந்திய நாட்டுச் சட்டம். அந்த அடிப்படையில் இங்கு குடியுரிமை கேட்பவர்களுக்கு குடியுரிமை அளித்தால் பிரச்சனை வருமா?

இத்தாலி நாட்டுப் பெண்மணியான சோனியாவுக்கு இந்திய குடியுரிமை வழங்கி காங்கிரஸ் தலைவியாக்கி வைத்துள்ளீர்களே! அதுகூடுமென்றால் இது கூடாதா?

அத்வானி என்ன இந்திய நாட்டில் பிறந்தவரா? அவர் பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் பிறந்து இந்தியாவில் ஊடுருவியர் தானே!

கலவரத்தைக் கட்டுப்படுத்த நாதியில்லாமல், அதற்கு திராணியின்றி கையாலாகாத்தனமாக நடந்து விட்டு அதற்கு காரணம் என்னவென்று கேட்டால், முஸ்லிம்கள் அதிகம் பிள்ளை பெறுவதுதான் என்று கையாலாகாத முதல்வர் தருண் கோகாய் கூறுகிறார்.

இதிலிருந்து கலவரத்தைத் தூண்டிவிட்டவரே இவராகத்தான் இருப்பாரோ என்ற சந்தேகம் நமக்கு ஏற்படுகின்றது.

அதிகப் பிள்ளை பெறுவதுதான் கலவரத்திற்குக் காரணமென்றால், 8 பிள்ளை பெற்ற நரசிம்ம ராவை பிரதமராக்கியது ஏன்? அதிகமாக குழந்தை பெற்றால் எங்களை கொன்று குவிப்பீர்களா? பிள்ளைகளைப் பெறுவது தேச துரோகமா?

இது வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சுவது போல உள்ளது. இந்த அயோக்கியனது ஆட்சியில் எங்களுக்கு நியாயம் கிடைக்காது. எனவே காங்கிரஸ் தலைமை உடனடியாக தருண் கோகாயை நீக்கி வேறு முதல்வரை நியமிக்க வேண்டும்.

முஸ்லிம்கள் தங்களது இருப்பிடங்களில் மீண்டும் நல்ல முறையில் குடியமர்த்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் இதற்கான விளைவுகளை காங்கிரஸ் அரசு சந்திக்கும். இந்த அயோக்கியத்தனம் தொடருமேயானால் எந்த ஒரு காங்கிரஸ் தலைவரும் தமிழகத்தில் நடமாட முடியாத நிலை ஏற்படும்” என்று எச்சரித்தார்.

கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் காவல்துறையினர் தாங்கள் கொண்டுவந்திருந்த வாகனங்கள் கைது செய்ய போதுமானதாக இல்லாததால் கைது நடவடிக்கை இல்லை என்று கூறி கலைந்து போகச் சொன்னதன் காரணமாக அனைவரும் அமைதியான முறையில் கலைந்து சென்றனர்.

இந்த செய்தி உருது மொழி உள்ளிட்ட பத்திரிக்கைகளில் வெளியானது.

புகைப்படங்கள்.

விரிவான செய்தி பின்னர் வெளியிடுப்படும்.