இனி முகம் பார்த்துப் பேசலாம்! சென்னையில் அமலுக்கு வந்த “BSNL 3G”

VideoCall3ஜி என்று சொல்லக்கூடிய போனில் பேசுபவரை பார்த்துக் கொண்டே உரையாடும் தகவல் தொழில் நுட்பத்தை பி.எஸ்.என்.எல். நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தியது.

ஆனால் இந்த திட்டம் வட மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. போனில் பேசுபவரை பார்த்துக்கொண்டே உரையாடும் வசதி சென்னையில் எப்போது அமல்படுத்தப்படும் என்று ஏராளமானோர் ஆவலுடன் இருந்தனர். இதற்காக அவர்கள் 3ஜி தொழில் நுட்பத்தை பயன்படுத்தக் கூடிய கேமரா செல்போன்களை வாங்கி தயாராக வைத்திருந்தனர்.

இந்நிலையில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் இந்த திட்டத்தை சென்னையில் 20-11-2009 அன்று அமல்படுத்தியுள்ளது. இதற்கான தொடக்க விழா அண்ணாசாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். நிறுவன அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த 3ஜி தொழில் நுட்பம் மூலம் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் வீடியோ அழைப்பு தவிர இன்டர் நெட், டெலிவிஷன் நிகழ்ச்சிகள், போன்றவற்றை பார்க்க முடியும்.

இந்த 3ஜி தொழில் நுட்ப வசதியை தற்போதுள்ள பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியும். இதற்காக அவர்கள் புதிய இணைப்பு எதுவும் பெற வேண்டிய அவசியம் இல்லை.

பி.எஸ்.என்.எல். பிரீபெய்டு வாடிக்கையாளர்கள் ரூ.120 ரீசார்ஜ் செய்தும், போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்கள் ரூ.50 கட்டணம் செலுத்தியும் 3ஜி தொழில் நுட்ப வசதியைப் பெற்றுக் கொள்ளலாம்.

இத்திட்டத்தின் கீழ் பி.எஸ். என்.எல். நிறுவன வாடிக்கையாளர்கள் லோக்கலில் பேச நிமிடத்திற்கு ரூ.1-ம், எஸ்.டி.டி பேச ரூ.1.50-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அறிமுக சலுகையாக லோக்கலுக்கு நிமிடத்திற்கு ரூ.30 பைசா, எஸ்.டி.டி.க்கு ரூ.50 பைசாவும் குறைக்கப்படுகிறது.